புரியாத புதிர் - சூழலமைவு கேள்விகள்
1.    “உன்விருப்பம் கிடக்கட்டும் உதறித்தள்ளு
ஊருக்குள் என்மதிப்பை அறிவாயா நீ..?
என்விருப்பம் இல்லாமல் துணிந்தவரே வருவார்  ! வேறு
பொன்விருப்பம் இருந்தால் கூறு...!”
அ. இவ்வரிகள் இடம்பெற்ற நூல், ஆசிரியர் போன்றவற்றை எழுதுக       ( 2 பு )
கவிஞர் காரைக்கிழார் இயற்றிய புரியாத புதிர் எனும் குறுங்காவியத்தில் இவ்வரிகள்
இடம்பெற்றுள்ளன.

ஆ. இக்கூற்று யாரால் யாரிடம் கூறப்பட்டது         ?                                     ( 2 பு )

இக்கூற்றினை மாரப்பன் அமுதனிடம் கூறினார்.

இ. மேற்காணும் வரிகள் எழுந்த சூழலை விளக்குக                                      ( 5 பு )

தனது மகள் கோதை, ஏழை ஓவியனாகிய அமுதனை விரும்புகிறாள் என்பதை அறிந்த மாரப்பன், அவனை நேரில் காண்கிறார். அமுதனைப் பற்றி அறிவதை விட தனது செல்வாக்கு பற்றி அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு  அவனுக்கு எச்சரிக்கை  விடும் நோக்கிலும் அமுதனோடு உரையாடும் சூழலில் இவ்வரிகள் எழுந்துள்ளன.

ஈ. கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளை விளக்குக                        ( 3 பு )

ஏழையாகிய அமுதன் தன் மகளை மறந்து விட வேண்டும் என எதிர்பார்க்கிறார் மாரப்பன். வறுமையில் வாடும் அவன் பணத்தைப் பெரிதென மதித்து அவரது எதிர்பார்ப்பிற்குச் சம்மதிப்பான் என நினைத்து விலை பேசுவதையே இச்சொல் குறிக்கிறது.

உ. புரியாத புதிர் காவியத்தில் காணப்படும் காதலின் வலிமையை விளக்குக.  ( 13 பு )
          புரியாத புதிர் எனும்காவியத்தைப் புனைந்தவர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள். இவர் மலேசிய நாட்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவர் தமிழின் மாண்பையும் இயற்கையின் எழிலையும் பாடியவர். மேலும் தமிழர் வாழ்வில் நடக்கும் துன்ப நிகழ்வுகளைத் தமது காவியங்களில் பதிவு செய்வதால் இவரைச் சமுதாயக் கவிஞர் என்றும் கூறுவதுண்டு.
      புரியாத புதிர் எனும் இக்காவியம் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. காதல் தோல்வி பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றது. சில வேளைகளில் வெளியிலிருந்து வரும் இடையூறுகளால் காதலர்கள் பிரியலாம். அல்லது அவர்களுக்குள்ளாகவே மனம் வேறுபட்டுப் பிரிய நேரிடலாம். இக்காவியத்தில் வரும் காதல், காலம் காலமாக மனித சமுதாயத்தில் பேசப்பட்டு வரும் ஏழை செல்வந்தர் வேறுபாட்டால் ஏற்படுவதோடு காதலர் இருவரும் இறப்பில் ஒன்றுபடும் சோக நிகழ்வுடன் முற்றுப்பெறுகிறது.
      கவிஞர் காரைகிழார் இக்காவியத்தில் வரும் நாயகன் நாயகியின் மூலம் காதலின் வலிமையை எடுத்துக் காட்டியுள்ளார். ஓவியக் கலைஞனாகிய அமுதன் ஏழையானாலும் தன் காதலியாகிய கோதையிடம் பேரன்பு செலுத்துகிறான். ஒரு நாள் கூட பிரிவின்றி இருவரும் சந்தித்து தங்களின் அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். தனிமையில் சந்தித்து அன்பைப் பொழிந்தாலும் பண்பாடு கட்டிக்காக்கும் அவர்களின் காதல் வலிமையானது என்பதற்கான சான்றாகும்.
      கோதை செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அனாதையாகிய அமுதனை உயிரினும் மேலாகக் காதலிக்கிறாள். கடலும் சுருங்கும்.. மாளிகையில் வாழும் பெண் குடிசையில் குடியிருக்கும் வாலிபனிடம் தன் மனதைப் பறிகொடுப்பதோடு தன் காதல் வெற்றிபெறப் போராடுகிறாள். தந்தையிடம் பயமும் பக்தியும் இருந்தாலும் தன் காதலனைப் பிரிய அவள் தயாராயில்லை என்பதால்தான் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இவளுடைய இந்தத் துணிவுக்குக் காதலின் வலிமையே காரணம் எனலாம்.
      அமுதனும் கோதைக்குச் சளைத்தவனல்ல. காரணம், வறுமையில் வாடும் இளைஞனாகிய அவன் நினைத்திருந்தால்  மாரப்பனின் ஆசை வார்த்தைக்கு இணங்கி, பணத்தைப் பெற்றுக்கொண்டு வேறெங்காவது சென்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் வலிமையான காதலை கோதையிடத்தில் கொண்டிருந்த அமுதன் மாரப்பனிடன் வாதிடுகிறான். பொன்விருப்பம் உண்டென்றால் கூறு.. எனச் சொல்லும் மாரப்பனிடம் பெண்விருப்பம் அறியாமல் பேசுகின்றீர்.. என கோதையின் மனதை நன்கு அறிந்தவன் தான்தான் என்பதை உணர்த்துவதோடு  கோதை தன்னைப் பிரிந்தால் உயிர் வாழமாட்டாள் என்பதையும் மறைமுகமாக எடுத்துரைக்கிறான். இவ்விருவரின் இப்படிப்பட்ட செயல்கள் அவர்களின் காதலின் வலிமையையே புலப்படுத்துகின்றன.
      அதுமட்டுமல்ல அமுதன், கோதை இவ்விருவரின் காதலின் வலிமை இறுதி வரை தொடர்கிறது. கோதையை இழக்க அமுதன் சம்மதிக்காததால் அவனது முகத்தில் எரி திராவகம் ஊற்றப்படுகிறது. இதனால் அவனது அழகிய முகம் சிதைந்து போகிறது. அவனைக் காணும் எவரும் அருவருத்து ஒதுங்கும் தோற்றத்தை அடைகிறான். கண்ணில் பட்ட எரி திராவகத்தால் அவனது பார்வையும் பறிபோய்விட நடைபிணமாகிறான் அமுதன். ஆயினும் தன் உயிர் பிரிவதற்குள் ஒருமுறையேனும் கோதையைப் பார்த்துவிட அவன் துடிப்பது காதலின் வலிமையால்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
      வலுக்கட்டாயமாகத் தமிழாசிரியர் ஒருவருக்கு மணமுடிக்கப்பட்ட கோதையோ உயிர் இருந்தும் ஜடமாய் வாழ்கிறாள். அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான் தாலிகட்டிய கணவன். கோதை தன்னிடம் அன்பு காட்ட என்னவெல்லாமோ செய்து பார்க்கும் கணவன் இறுதியில் கடை வீதியில் கண்ணில்லா ஓவியன் விற்ற ஓவியம் ஒன்று தன் மனைவி கோதையைப் போலவே இருப்பதைக் கண்டு அதைப் பெற்று அவளுக்குப் பரிசளிக்கிறான். ஆனால் தன் உயிர்க்காதலன் அமுதன் வரைந்த ஓவியம்தான் அது எனக் கண்ட மறுகணமே உயிர் துறக்கிறாள் கோதை. இவளின் இந்நிலைக்குக் காரணம் கோதையின் ஒவ்வொரு அணுவிலும் அமுதன் நிறைந்திருந்தான் என்பதோடு தன்னால்தான் அமுதன் வாழ்வழிந்து போனான் என்பதாலும் கோதை தன் காதலின் வலிமையை மரணத்தின் மூலம் நிரூபிக்கிறாள்.
      எனவே கருத்து ஒருமித்த காதலர்கள் எவ்வித இடர் வந்தாலும் மனம் மாற மாட்டார்கள். வலுக்கட்டாயமாக அவர்கள் பிரிக்கப்பட்டாலும் காதலின் வலிமை அவர்களை மரணத்திலாவது ஒன்று சேர்க்கும் என்பது இக்காவியத்தின் மூலம் நன்கு புலப்படுகிறது.

2           “நீ யில்லா வாழ்வேபாழ் என்னும் ஒன்றே
                             நினைப்பாகி  இருக்கின்றேன் அம்மா! இங்கே
                    பாயில்லாப் படகின்மேல் போனா ரெல்லாம்
                             பாதிக்கு மேல் என்ன ஆனார் ?

அ) இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ,ஆசிரியர், கூற்று  போன்றவற்றை எழுதுக      ( 3 பு )

          புரியாத புதிர் எனும் காவியம் கவிஞர் காரைக்கிழார் அவர்களால் எழுதப்பட்டது. இவ்வரிகளை மாரப்பன் தன் மகள் கோதையிடம் கூறுகிறார்

ஆ) இவ்வரிகள் எழுந்த சூழலை விளக்குக                                                         ( 5 பு )
         
          தன் காதலன் அமுதனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறாள் கோதை. வீட்டின் மையப் பகுதியில் தன் தந்தை மாரப்பன் தனக்காக காத்திருப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறாள்.  இரவு நேரத்தில் தனியே வெளியில் சென்று வரும் மகளை மாரப்பன் கண்டிக்கும் சூழலில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.

இ) கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைச் சூழலுக்கு ஏற்ப விளக்குக                   ( 3 பு )

          கடலில் செல்லும் பாய்மரக் கப்பலுக்குக் காற்றின் திசையறியும் பாய் போன்ற துணி அவசிமாகிறது.  பாயில்லாப் படகு  திக்கு திசை தெரியாமல் அல்லாடி வெறெங்காவது சென்றுவிடும். அதுபோல் ஒரு சரியான வழிகாட்டி இல்லாமல் தன் மனம்போன போக்கில் செல்பவர் பிற்காலத்தில் பெரும் துன்பத்துக்கு ஆளாகலாம் என்பதையே இச்சொல்  விளக்குகின்றது.

ஈ) புரியாத புதிர் நாயகியின் பண்புநலன்களை ஆராய்க                               ( 14 பு )

      புரியாத புதிர் எனும் காவியத்தைப் புனைந்தவர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள். இவர் மலேசியக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இந்தக் காவியம் காதல் தோல்வியை கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இக்காவியத்தின் நாயகியாக வலம் வருபவள் கோதை.
      கோதை அவ்வூர்ப் பெரும் பணக்காரரான மாரப்பனின் ஒரே மகள். தாயில்லாப் பிள்ளை என்பதால் தன் பாசத்தையெல்லாம் கொட்டி வளர்க்கிறார் மாரப்பன். ஆயினும் தந்தையிடம் மிகுந்த அச்சம் கொண்டிருக்கிறாள் கோதை. அதனால்தான் தந்தை தன்னைக் கண்காணிக்க ஆள் அனுப்பியிருப்பதை உணர்ந்து அமுதனிடமிருந்து விடைபெற்று ஓடோடிச் செல்கிறாள். அதுவுமின்றி தன் தந்தையை எதிர்த்துத் தன்னால் அமுதனைத் திருமணம் செய்து வாழ முடியாது எனும் அச்சத்தில் அவனோடு ஊரை விட்டு ஓடிப் போகவும் முடிவு செய்கிறாள். இது கோதை தன் தந்தையிடத்தில் கொண்ட அச்சத்தினை வெளிப்படுத்துகிறது.
      மேலும் ஏழை ஓவியக் கலைஞனாகிய அமுதனிடம் உண்மையான அன்பு செலுத்துகிறாள் கோதை. தன் தந்தையைப் போல் அல்லாமல் உண்மை அன்புக்கு அடி பணிந்து அமுதனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். தன் காதல் நிறைவேறாது என உணர்ந்ததும் இரவோடு இரவாக அமுதனோடு ஓடிப்போகவும் துணிகிறாள். அமுதனை இழக்க அவள் தயாராயில்லை என்பது இதன் வழி தெளிவாகிறது.
      ஓவியப் பெண்ணுக்குரிய அழகு படைத்த கோதை, சூழ்நிலைக் கைதியாகித் தவிக்கும் பெண்ணாகவும் திகழ்கிறாள். கண்ணெதிரே தன் காதலன் கொடூரமான முறையில் தாக்கப்படுவதைக் கண்டு அவளால் கதறி அழத்தான் முடிந்தது. பின்னர் வலுக்கட்டாயமாகத் தன்னைத் தமிழாசியர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைப்பதையும் தடுக்க முடியாமல் நடைப்பிணமாக அதனை ஏற்கிறாள். ஊர் அறிய அவளுக்குத் திருமணம் நடந்தாலும் உள்ளத்தால் கோதை அமுதனின் நிலையறியத் தவிக்கிறாள் என்பதை இக்காவியத்தை உணர்ந்து படிப்போர் புரிந்து கொள்ளலாம்.
      எல்லாவற்றுக்கும் மேலாக, கோதை, உயர்வு தாழ்வு எனும் சமுதாய வேறுபாட்டிற்குப் பலியாகும் பெண் என்றே கூற வேண்டும். தான் உயிருக்குயிராய் நேசித்த காதலனின் நிலையைத் தெரிந்து கொள்ள இயலாத நிலையில் திருமணமாகித் தலைநகர் வந்த பின்னும் உயிரற்ற உடல்போல் வாழ்கிறாள். அவள் மனதைக் கவர எவ்வளவோ முயன்றும் தோல்வி காணும் அவளது கணவன், கடைவீதியில் விற்கப்பட்ட ஓவியம் அவள் மனதை மாற்றும் என நினைத்து அதனை அமுதனிடமிருந்து பெற்று வருகிறான், ஆனால் உள்ளத்தாலும் உணர்வாலும் அமுதனையே நினைத்திருந்த கோதை அந்த ஓவியம் அமுதன் வரைந்ததுதான் எனக் கண்டுகொண்ட மறுகணமே தன் உயிரை விட்டு விடுகிறாள். அவளின் இந்த நிலைக்குச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்பதை மறுக்க இயலாது. 
      எனவே, கோதை செல்வந்தர் வீட்டுப் பெண்ணாகப் பிறந்திருந்தாலும், ஒரு சராசரிப் பெண்ணாகவே காணப்படுகிறாள். அதனால்தான் அவளால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தன் மனதை மாற்றிகொள்ள முடியவில்லை.



3 “கண்ணில்லா ஓவியத்தைக் கண்ட பின்னும்
      கல்மனத்துக் கண்எவரும் வைப்பாரென்றால்
  கண்ணில்லா ஓவியம்போல் காதல் என்றும்
      கண்ணில்லா திருக்கட்டும்..! கண்ணே வேண்டாம்...!”

(அ) இவ்வரிகள் இடம்பெற்ற நூல், ஆசிரியர் போன்றவற்றை எழுதுக       ( 2 பு)
புரியாத புதிர் எனும் காவியத்தில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இக்காவித்தைப் புனைந்தவர் கவிச்சுடர் காரைகிழார் அவர்கள்.

(ஆ) இக்கூற்றினில் இடம்பெறுபவர் யாவர் ?                           ( 2 பு )
      இக்கூற்றினை அமுதன் தனது ஓவியத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக் கூறியதாகும்.

(இ) மேற்காணும் வரிகள் இடம்பெற்ற சூழலை விளக்குக.                ( 5 பு )
      அமுதன் கோதையைத் தேடி தலைநகருக்குச் செல்கிறான். அங்கு சாலையோரத்தில் தான் வரைந்த முடிக்கப்படாத கோதையின் எழில் ஓவியத்தை விரித்துப் பிறர் பார்வைக்கு வைக்கிறான். பலரும் ஓவியத்தைப் பார்த்துப் பரவசமாயினர். இருப்பினும், அந்த ஓவியத்திற்குக் கண் இல்லாதது பலருக்கும் குறையாகப் பட்டது. பெரியவர் ஒருவர் அழகான ஓவியத்தை வரைந்து, அதன் முழு அழகையும் வெளிப்படுத்தா வண்ணம் கண்களை வரையாமல் விட்ட ஓவியனை மடையன் எனத் திட்ட, அதற்கு மறுமொழிகூறும் அமுதனின் கூற்றாக இச்சூழல் அமைகிறது.

(ஈ) கோடிடப்பட்ட சொல்லின் பொருளை விளக்குக                     ( 3 பு )
      உயர்வு தாழ்வு பாராமல் மனம் ஒன்றையே பார்த்து, காதலில் விழுந்தோரை இச்சமுதாயம் வாழ விடுவதில்லை. கல் மனதுடன் காதலரைப் பிரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்போர் இவ்வோவியத்தைக் காண வேண்டிய அவசியமில்லை என்பதே இச்சொல்லின் பொருளாகும்.

(உ) அமுதனும் கோதையும் கொண்ட காதல் தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களை விளக்குக                                             ( 13 பு )
 புரியாத புதிர் எனும்காவியத்தைப் புனைந்தவர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள். இவர் மலேசிய நாட்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவர் தமிழின் மாண்பையும் இயற்கையின் எழிலையும் பாடியவர். மேலும் தமிழர் வாழ்வில் நடக்கும் துன்ப நிகழ்வுகளைத் தமது காவியங்களில் பதிவு செய்வதால் இவரைச் சமுதாயக் கவிஞர் என்றும் கூறுவதுண்டு.
      புரியாத புதிர் எனும் இக்காவியம் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. காதல் தோல்வி பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றது. சில வேளைகளில் வெளியிலிருந்து வரும் இடையூறுகளால் காதலர்கள் பிரியலாம். அல்லது அவர்களுக்குள்ளாகவே மனம் வேறுபட்டுப் பிரிய நேரிடலாம். இக்காவியத்தில் வரும் காதல், காலம் காலமாக மனித சமுதாயத்தில் பேசப்பட்டு வரும் ஏழை செல்வந்தர் வேறுபாட்டால் ஏற்படுவதோடு காதலர் இருவரும் இறப்பில் ஒன்றுபடும் சோக நிகழ்வுடன் முற்றுப்பெறுகிறது.
      இக்காவியக் காதல் தோல்வியில் முடியப் பல காரணங்கள் உள்ளன. சமூகக் கட்டுபாடு எனும் பெயரில் ஏழை பணக்காரர் எனும் பாகுபாடு பல சமயங்களில் காதலைப் பிரிக்கும் கருவியாகின்றது. கோதையின் தந்தை மாறப்பன், மிகுந்த செல்வந்தர்; அதனால் தம் மகளை சாதாரண அனாதை இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுக்க அவர் தயாராய் இல்லை. அதுவே இங்கு முதல் தடையாகிறது. கோதையின் காதலைத் தெரிந்து கொண்ட மாறப்பன், அமுதனை அழைத்து வந்து பேரம்பேசுகிறார். ஆனால் அமுதனோ அதற்குச் செவி சாய்க்கவில்லை.
      அடுத்ததாக, கோதையின் அவசர முடிவும் அவர்களின் காதல் தோல்வியில் முடியக் காரணமாகின்றது எனலாம். தன் தந்தை தனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்கிறார் என உணர்ந்த கோதை, இரவோடு இரவாக அமுதனைத் தேடிச் சென்று ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து வாழலாம் எனக் கூறுகிறாள். அவளின் இந்தச் செயல் ஒரு வகையில் மாறப்பனின் பெருங்கோபத்துக்கு காரணம் என்றே கூறவேண்டும். அதனால்தான் மாறப்பனின் ஆட்கள் அமுதனைத் தாக்கி, அவனைக் கோரமாக்கி நடப்பிணமாக்கி விடுகின்றனர்.
      பெண்புத்தி பின்புத்தி என்பார்கள்; அதனால் ஆண் என்ற வகையில் அமுதனாவது சற்றுச் சிந்தித்து செயல்பட்டிருக்கலாம். கோதையின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தராமல் அவளை மாறப்பன் வீட்டிற்கே அனுப்பி வைத்திருந்தால் மாறப்பனின்  கல் மனமும் கரைய வாய்ப்பிருக்கிறது. அதை விடுத்து அமுதனும் யோசிக்காமல் கோதையுடன் ஊரை விட்டுச் செல்ல முயன்றதால் பெரும் விபரீதம் நிகழ்ந்து அவர்களின் காதல் தோல்வியில் முடிந்து விடுகிறது.
      எனவே காதல் என்பது இருவர் மட்டுமே சம்பந்தப் பட்ட விஷயமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியப் பல்வேறு அம்சங்களூம் கருத்திற் கொள்ளப் பட வேண்டியவையே என்பதை இந்தப் புரியாத புதிர் எனும் குறுங்காவியம் விளக்குகின்றது.

     
     






4.                       அவருக்குப் பதிலொன்றைத் தேடித் தேடி
                  ஒப்பாமல் பொய்சொன்னாள்! அப்பா நான் என்
                        உயிர்த்தோழி வீட்டுக்குச் சென்றேன்..” என்றே
                  அப்பாவை அடக்குவதும் பொய்தான் என்றால்
                        அப்பொய்யே வாழ்கென்னும் பேதை உள்ளம்..
     
அ. இவ்வரிகள் இடம்பெற்ற நூல், ஆசிரியர் போன்றவற்றை எழுதுக       ( 2 பு )
      புரியாத புதிர் எனும் காவியத்தில் மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ளன். இக்காவியத்தைப் புனைந்தவர் கவிஞர் காரைக்கிழார் அவர்கள்.

ஆ. இக்கூற்று வெளிப்படும் சூழலை விளக்குக                          ( 5 பு )
      மாறப்பனின் மகள் கோதை தன் காதலன் அமுதனைச் சந்தித்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறாள். அந்த நேரத்தில் மாறப்பன் வீட்டின் முற்றத்தில் அவளின் வருகைக்காக காத்திருப்பதைக் காண்கிறாள். பூனைபோல சப்தமின்றி வீட்டினுள்ளே நடந்து வந்த தன் மகளிடம் சென்று வந்த இடம் யாதென மிரட்டிக் கேட்கிறார் தந்தை. உண்மையை மறைத்துத் தன் தந்தையிடம் கோதை பொய்யுரைக்கும் சூழலில் இக்கூற்று அமைகிறது.

இ.  கோடிடப்பட்டுள்ள சொற்றொடரின் பொருளை விளக்குக.                  ( 5 பு )
      அமுதனைக் கண்டுவிட்டு வீடு திரும்பிய கோதை தன் தந்தையைக் கண்டு திடுக்கிடுகிறாள். தந்தையின் இடிபோன்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். ஆயினும் தந்தைக்குப் பதில் அளிப்பதற்காக பதில் ஒன்றை மனதுக்குள் தேடித் தேடி, தான் தன் தோழி வீட்டிற்குப் போய் வந்ததாகப் பொய் உரைக்கிறாள். அந்த நேரத்திற்கு அவள் கூறிய பொய் அவளது தந்தையைச் சமாதானப் படுத்துகிறது. அதனால் சமயத்திற்க்கு உதவிய பொய்யைக் கோதையின் மனம் வாழ்த்துகிறது.





Comments

Post a Comment

Popular posts from this blog

சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்

STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை