ஈகையின் மகத்துவம் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.







ஈகையின் மகத்துவம் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை
       திருக்குறள் தமிழர்களின் மறைநூலாக விளங்குகிறது. எல்லா நாட்டினரும், எல்லா சமயத்தினரும் போற்றுகின்ற நீதி நூல் இது. மனிதனின் சமுதாய வாழ்விற்குத் தேவையான அற நெறிகளையும் அறிவுரைகளையும் கூறும் வாழ்வியல் நூலாகவும் இது திகழ்கிறது. அதனால்தான் பிற இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், சீனம், ஜப்பான், சிங்களம் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
       திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். தெய்வப்புலவர், முதற்பாவலர், பொய்யாமொழிப்புலவர் போன்றவை இவரின் வேறு பெயர்கள். திருவள்ளுவர் வாசுகி என்பாரை மணந்து, நெசவுத் தொழில் செய்து வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.
       திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. இது 1330 குறட்பாக்களைக் கொண்டது. 133  அதிகாரங்களில் ஒவ்வொன்றுக்கும் பத்து பத்து குறட்பாக்கள் வடிக்கப் பட்டுள்ளன. அவ்வகையில், அறத்துப்பாலில் ஈகை எனும் அதிகாரம் இடம் பெற்றுள்ளது.
       இல்லறத்தாரும், துறவறத்தாரும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய நெறிகளைச் சுட்டும் அறத்துப்பாலில், அன்புடையவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு வாளாவிருக்க முடியாது என ஈகை அதிகாரத்தின் வழி குறிப்பிடப் படுகிறது. வெறும் ஆறுதல் பேச்சும், இரக்க எண்ணமும் மட்டும் பிறருடைய துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால், தம்மால் ஆன உதவியைச் செய்து பிறரின் வறுமைத் துன்பத்தைத் தீர்க்க முயல்வதே கடமை என்கிறது ஈகை.
       ஈகை எனும் பெயரால் பொருள் படைத்தவர்க்கே மேலும் மேலும் கொடுப்பதில் பயன் இல்லை; அது ஈகையும் ஆகாது. வறுமையால் வாடும் ஒருவர்க்கு பொருள் உதவி செய்வது பயன் அளிக்கும். தவிர வசதி படைத்தவர்க்கு பொருள் கொடுத்தால் அது ஏதேனும் ஒரு பயன் கருதியே என்பதை
                                                வறியார்க்கு  ஒன்றுஈவதே  ஈகை  மற்றெல்லாம்
                                                குறியெதிர்ப்பை  நீரது  உடைத்து
என்கிறார்.
       மேலும் ஒருவர் கொடுக்கும் பொருளைப் பெற்று, அதனால் வயிறு வளர்க்கும் ஒரு வாழ்க்கை வேதனைக்குரியது. பிறரிடம் கையேந்திக் கேட்டு, அவர் கொடுப்பதைப் பெற்று வாழ்வதை விட பிறருக்குக் கொடுக்கும் நிலையில் நாம் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
       வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பர் பெரியோர். ஒருவனின் துன்பநிலை அறிந்து, அவன் கூறுவதற்கு முன்பாகவே பொருளுதவி செய்யும் தன்மை நல்ல குடியில் பிறந்த மேன்மக்களிடம் காணப்படும் பண்பு என்பதனை ;
                                இலனெனும் எவ்வம் உரையாமை ஈதல்
                                குலனுடையான் கண்ணே உள.

எனும் குறள் வழி கூறுகிறார்.  அதோடு தவ வலிமை மிக்கவர்கள் தம் பசியைப் பொறுத்துகொள்ளும் வல்லமை பெற்றவர்கள். அப்படிப்பட்ட வல்லமையை விட மேலானது பசியால் வாடுவோருக்கு உணவிடும் தன்மை என்றும் ஈகையின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.
       தான் பெற்ற உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் பண்புடையோரை பசி எனும் கொடிய நோய் வாட்டுவதில்லை என்று
                                பாத்தூண் மரீ இயவனைப் பசியென்னும்
                                தீப்பிணி தீண்டல் அரிது

எனும் குறள் வழி போற்றுகிறார் பொய்யாமொழிப் புலவர். அதேபோல் பொருள் படைத்தவர் தமது கடைசிக் காலத்திற்கான சேமிப்புப் பொருளாக ஈகையினால் ஏற்படும் புண்ணிய பலன்களை வைத்திருக்க வேண்டும் என்பதும் இவ்வதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
       அது மட்டுமல்ல.
                                ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
                                வைத்திழக்கும் வன் கணவர்

என்று பொருளைக் குவித்து பிறருக்கு ஈயாது வாழ்வோர் ஈதலின் இன்பத்தை அறியாதவர் எனவும் அவ்வாறே பிறருக்குக் கொடாமல் தாமே தனியாளாகத் தனித்து உண்பது இரத்தலைவிடக் கொடுமையானது எனவும் வள்ளுவரால் இடித்துரைக்கப் படுகிறது.

       இறுதியாக, அதே வேளை உறுதியாக, சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை; ஆனால் வறியவர்க்குக் கொடுக்க ஒன்றுமில்லாதபோது அந்தச் சாதலே இன்பமானது எனக் கூறி ஈகையின் மகத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்

Comments

Popular posts from this blog

சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்

STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை